நீங்கள் நேசிப்பவர் உங்கள் இதயத்தோடு ஒன்றிணையக் கூடியவரா?

இன்றைய நவீன யுகத்தில் காதல் பல பரிமாணங்களை எடுத்துள்ளது. ஆனாலும் கூட ஒரு நல்ல காதலுக்காக ஏங்கியபடியே காத்திருக்கும் நெஞ்சங்கள் கோடி உண்டு. தற்போதைய காலத்தில் காதலின் ஆதிக்கம் நிரம்பி வழிந்தாலும் நாம் சந்தித்த அந்த நபர் நமக்கானவரா என்பதில் பல்வேறு சந்தேகங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

நேசிப்பவரின் முரண்கள் கலந்த பேச்சு மற்றும் செய்கைகள் நம்மை பல இடங்களில் யோசிக்க வைத்து விடுகின்றன. இந்த பதிவில் நீங்கள் நேசிப்பவர் உங்களுக்கானவர்தானா? உங்கள் இதயத்தோடு ஒத்துப் போகிறவரா? இல்லை பிற்பாடு மாறிவிடுவாரா ? என்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கானவர் உங்களை சந்திக்க வரும்போது நிச்சயம் அது சரியான நேரத்தில் குறிப்பிட்டபடி உங்கள் சந்திப்பு நிகழ வேண்டும். அப்படி இல்லாமல் தாமதாமாகவோ தள்ளிபோடப்பட்டு கொண்டோ இருந்தால் கொஞ்சம் யோசியுங்கள்.

உங்களுக்கு நீங்கள் சந்தித்த அந்த நபர் மீது உண்மையாகவே காதல் இருந்தால் நிச்சயம் அவர்களை நிறை குறைகளோடு உங்களால் ஏற்று கொள்ள முடியும். அவரது தவறுகளை மன்னிக்க அல்ல மறக்க உங்களால் முடிந்திருக்கும். இப்படி ஒரு மேஜிக் நடந்தது என்றால் அது நிச்சயம் உங்களுக்கானவரோடுதான் நடக்க முடியும்.

உங்கள் இருவரின் கருத்துக்களும் பெரும்பான்மையான நேரங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். தினமும் ஒவ்வொரு விஷயத்திற்கும் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்க முடியாது. எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படும்தான் ஆனாலும் ஒத்த சிந்தனை உள்ளவர்களின் வாழ்வே நிரந்தர நிம்மதியோடு இருக்கும்.

பெரும்பாலும் பொஸசிவ்னெஸ் என்பது தான் உறவுகளின் விரிசலுக்கு காரணமாக அமைகிறது. உண்மையாகவே நீங்கள் ஒருவரை புரிந்து நேசித்தால் அந்த உறவில் பொறாமை வராது. ஆயிரம் பேருடன் அவர் இருந்தாலும் நமக்கான இடம் எப்போதும் இருக்கும் எனும் நம்பிக்கை ஏற்படும். உங்களுக்கான ஒரு இதயம் உங்களுக்காகத்தான் இருக்கும். இதில் சிக்கல் இருப்பின் பொஸசிவ்னெஸ் அதிகமாக இருந்தால் நிச்சயம் இந்த உறவு உங்களுக்கானது இல்லை.

உங்களுக்கான ஒருவரோடு நீங்கள் காதல் கொள்கையில் நிதானம் அதிகமாக இருக்கும். மறைமுகமான மிரட்டல்கள் காதல்களில் இருக்கவே கூடாது. அடுத்தவரை மதிப்பற்றவராக யோசிக்க வைக்கும் மிரட்டல்கள் மறைமுகமாக நீங்கள் அறியாவண்ணம் கூட நடக்கலாம். உங்கள் உரையாடல்களை நீங்கள் சரியாக கவனித்தால் இப்படிபட்ட மிரட்டல்கள் இருப்பின் நீங்கள் விலகி விடலாம்.

உங்களுக்குள் என்ன சங்கடங்கள் நடந்தாலும் சண்டைகள் நடந்தாலும் மன்னிப்பு கேட்கவும் மன்னிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்குள் எழும் சின்ன விவாதங்கள் கூட திடீரென மாறி பெரும் சண்டையாகலாம். யார் ஜெயிப்பது என்பது முக்கியமல்ல உங்கள் உறவு நிலைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். உங்களுக்கான ஒரு உறவில் இத்தகைய மன்னிப்புகள் சுலபமாக நடந்தேறும்.

உங்களுக்கானவரோடு நீங்கள் காதல்வயப்பட்டிருந்தால் உங்களது விருப்பங்கள் உங்களுக்கு மறந்து போய் அவரது மகிழ்ச்சி உங்களுக்கு முக்கியமாக தோன்றும். அவரது சந்தோஷத்திற்காக உங்கள் விருப்பங்களை விட்டு கொடுக்கிறீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட உறவில்தான் இருக்கிறீர்கள்.

இரண்டு விதமான உறவுகள் இருக்கின்றன. ஒன்று உங்களுக்கு மன பதட்டத்தை ஏற்படுத்தி நிம்மதியின்றி உங்களை அலைய விடுபவர். இன்னொரு உறவு நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது நீங்களே அவரைத் தேடி போகும் அளவிற்கு உங்களை பாதுகாப்பவர். அவரை பார்த்தாலே உங்களுக்கு மனம் அமைதியாகும். அவர் அருகில் இருந்தால் நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள் என்றால் நிச்சயம் அவர்தான் உங்களுக்கானவர்.

முதிர்ச்சியற்ற பல காதல்கள் சிதறி போகின்றது. பக்குவம் அடைந்த மனதுடையவர்கள் காதலிக்கும்போதுதான் காதல் தன்னை முழுமையாக்குகிறது. உங்களுக்கானவர் உங்கள் வாழ்வில் வந்தபின் நீங்கள் உங்கள் வாழ்வின் அடுத்த படியில் ஏறியிருப்பீர்கள். உங்களை சந்தோஷமாக அவர் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். எந்த ஒரு நேரத்திலும் உங்களை அவர் மற்றவர் முன் தலைகுனிய வைக்க கூடாது. உங்களை மோசமான பாதைகளுக்கு கூட்டி செல்லக் கூடாது. இதெல்லாம் சரியாக இருந்தால் நிச்சயம் அவர்தான் உங்கள் இதயத்தோடு ஒன்றிணையக் கூடிய அந்த ஒருவர்!