இருபுறமும் கூர்மையான கத்தி போன்ற காதல் வாழ்க்கை

காதல் அனுபவங்களை பெற்ற பெண்கள் ‘அது இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது. அஜாக்கிரதையாக கையாண்டால் அது நம்மை குத்திக்கிழித்து, நமது வாழ்க்கையை காவு வாங்கிவிடும்’ என்கிறார்கள். சில பெண்களுக்கு காதலில் பாதி கிணறு தாண்டும்போது தங்கள் காதலன் மோசமானவன் என்பது தெரிந்துவிடும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ‘அவனை திருமணம் செய்துகொண்டு திருத்தி, வாழ்ந்து காட்டுகிறேன் பாருங்கள்’ என்று சவால்விட்டுக்கொண்டு செயலில் இறங்கி விடுவதால், அவர்களின் வாழ்க்கை இருண்டுபோகிறது.

இருவரிடமும் உண்மை தேவை. ஒருவர் உண்மையாக நடந்துகொள்ள, இன்னொருவர் அதை பலவீனமாக நினைத்து ஏமாற்ற முற்படும்போது உண்மையானவர் சுதாரித்துக்கொண்டு விலகிட வேண்டும். காதல் சக்தி மிகுந்தது. நல்லவர்களுக்கு அது சுகமானது. பொழுதுபோக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு அது சோகமானது. காதல் உணர்வுரீதியானது. அதனால், உண்மையில்லாத காதலரை மறப்பது கஷ்டம்தான். அதற்காக ஏற்கக்கூடாத காதலை ஏற்று, வாழ்க்கையை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது.

காதல் கற்பனையில் இனிக்கும். நிஜத்தில்தான் கசக்கும். பெண்களிடம் தவறான எண்ணத்தோடு பழகும் ஆண்கள்கூட அந்த நெருக்கத்திற்கு காதல் என்று பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். இன்றைய இளையதலைமுறையினர் தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி காதல் தூதுவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் தடம் மாறிய காதல் சகஜமாகிவிட்டது. பணத்திற்காக காதல் வலைவீசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வலைத்தளங்களின் வழியாக வசதியான ஆண்களை காதலிப்பதுபோல் நடித்து, வசமாக சிக்கவைத்து பணம் பறிக்கிறார்கள்.

காதல் புனிதமானதுதான். காதலிப்பவர்களும் புனிதமானவர்களாக இருந்தால்தான் அந்த புனிதத்தை காப்பாற்ற முடியும். காதல் இருவேறு மனிதர்களின் தனிப்பட்ட முயற்சியாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குள்ளே ரகசியமாகவே அது நடந்தேறுகிறது. அப்போது அவர்களுக்குள் இருக்கும் குறைகள் அனைத்தையும் மூடிமறைக்கிறார்கள். குறைகளை கண்டறிந்து விலக்கி, அதில் தெளிவான நிலைக்கு வராமல், ‘காதலுக்கு கண்இல்லை’ என்றுகூறி எல்லா குறைகளையும் தங்களுக்குள் அங்கீகரிக்கிறார்கள். அந்த தவறால்தான் பெரும்பாலான காதலர்கள் காதலில் தோல்வியடைகிறார்கள்.