குளிர்காலத்தில் முதியவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும்!!!

வீட்டில் வயதான பெற்றோர்கள் இருக்கிறார்களா. அப்போ அவர்கள் முதியவர்கள் இல்லை. முதிய குழந்தைகள். அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வவதை கடமையாக நினைக்காமல் அன்புடன் செயல்பட வேண்டும்.

குளிர் காலத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது முதியோர் தான். பொதுவாக குளிர் காலத்தில் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள், முக்கியமாக தோலில் உள்ள ரத்த நாளங்கள் சுருக்கமடையும். அந்த ரத்த நாளங்கள் சுருங்கும் போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படும் வாய்ப்பு வயதானவர்களுக்கு ஏற்படலாம்.

இருதய நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிபிடிக்கவும் வாய்ப்புண்டு. சர்க்கரை நோயாளிகளில் தானியங்கி நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டோருக்கு உடம்பில் உள்ள வியர்வை சுரப்பிகள் செயலிழந்து இருக்கும். எனவே, குளிர் காலத்தில் வியர்வையே வராது.
தொடர்ந்து தோலில் வியர்வை வராவிட்டால் தோல் உலர் தன்மை அடைந்து விடும். தோலில் அரிப்பு ஏற்படும்.

அரிக்கும்போது அது புண்ணாகி மிகவும் பெரிய புண்ணாகும் வாய்ப்புண்டு. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் வெடிப்பு ஏற்படும். இந்த கால் வெடிப்பு கால் புண் வருவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். எனவே வயதானவர்கள் முக்கியமாக நடை பயிற்சி செய்யும்போது குளிர் முடிந்தவுடன் நடை பயிற்சி செய்வது நல்லது.