இந்திய அணிக்கெதிரான மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 133 ரன்களை எடுத்தது

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது.

கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 82 ரன்கள் முன்னிலை, கைவசம் 5 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து ஆடியது. ரஹானேவும், ஜடேஜாவும் தொடர்ந்து விளையாடினார்கள். மிகவும் சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடி ஆட்டம் தொடங்கிய 8-வது ஓவரில் பிரிந்தது. ரஹானே 112 ரன்னில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

மறுமுனையில் இருந்த ஜடேஜா சிறப்பாக ஆடி 50 ரன்னை எடுத்தார். 50-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 15-வது அரை சதமாகும். 103.5-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை தொட்டது. இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும். 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது.

42 ரன்னில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்தது. 137 பந்துகள் சந்தித்து நம்பிக்கையுடன் விளையாடி மேத்யூ வாடே எல்பிடபில்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா அணியின் ரன்னின் எண்ணிக்கை 99 ஆக இருந்தது. கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.