கிரிக்கெட் ரசிகர்கள் இன்று மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்

சென்னை: சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்கள் மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.

இந்தாண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உலகக்கோப்பைத் தொடரின் 5 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டிகளை காண பல பகுதிகளிலிருந்து ரசிகர்கள் வருவார்கள் என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் சிந்தாரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எனவே அதன்படி, போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ இரயில் சேவை வழக்கத்தை விட கூடுதலாக 1 மணி நேரம், அதாவது, இரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.