ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது இனவெறி பாகுபாடு காட்டப்பட்டதாக டேரன் சேமி புகார்

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விளையாட்டு பிரபலங்களும் சமூக வலைதளம் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி, ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது அமெரிக்கா சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. இந்த பிரச்சனை தினந்தோறும் நடக்கிறது என்று கூறினார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐ.பி.எல்.-ல் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய போது என்னையும், இலங்கை வீரர் திசரா பெரேராவையும் ‘கலு’ என்றே அழைப்பார்கள். அதன் அர்த்தம் கருப்பு நிறத்தை சேர்ந்த வலுவான மனிதர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு அது கருப்பு இனத்தை கிண்டல் செய்ய கூறப்படும் வார்த்தை என்று அறிந்ததும் இப்போது கோபம் தான் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், டேரன் சேமி தன்னை இவ்வாறு கேலி செய்தது சக வீரர்களா அல்லது ரசிகர்களா, எப்போது அது நடந்தது போன்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.