தனிப்பட்ட சாதனைகளில் கவனம் வேண்டாம்... கௌதம் காம்பீர் அட்வைஸ்

மும்பை: தனிப்பட்ட சாதனைகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்று விராட்கோலிக்கு கௌதம் காம்பீர் அட்வைஸ் செய்துள்ளார். ஐசிசி 8வது டி20 உலக கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து சூப்பர் 12 போட்டிகள் வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் அக்டோபர் 23ம் தேதி விளையாடுகிறது. இந்த நிலையில் உலக கோப்பை குறித்து அந்தந்த அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சி போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஸ்டார் விராட் கோலி குறித்து தெரிவித்துள்ளதாவது:

இந்திய அணி உலக கோப்பையை வெல்ல உதவும் ரன்களை உருவாக்குங்கள் தனிப்பட்ட சாதனைகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்று விராட் கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார். மேலும் கடந்த 2015 உலக கோப்பையை சிறப்பாக விளையாடியவர் என்றும் தற்போது சூரியகுமார் யாதவ் சிறந்த ஃபார்மில் இருப்பதால் அவரை 3வது இடத்தில் களமிறக்கி பரிசோதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.