மான்செஸ்டர் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் திணறும் இங்கிலாந்து

மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷான் மசூத், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபித் அலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தபின், பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி களம் இறங்கினார்.

ஆனால் அசார் அலிரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். பாகிஸ்தான் 43 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின், ஷான் மசூத் உடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினர். பாகிஸ்தான் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கீட்டதால் முதல்நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 109.3 ஓவரில் 326 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதன்பின் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோய் பொர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர். இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

போப் 46 ரன்களுடனும், பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியை விட 234 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி உள்ளதால் சற்று திணறி வருகிறது. பாகிஸ்தான் இளம் வீரர் முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.