பாடகர் எஸ்பிபி மறைவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆழ்ந்த இரங்கல்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று காலமானார். அவரது மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை அவர் 40 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 16 மொழிகளிலும் பாடியுள்ளார். பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவிற்கு திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது பாடலுக்கு ரசிகராக இல்லாதவர்களே இல்லை என கூறலாம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் எஸ்பிபி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகர் திரைப்படத்தில் இடம்பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் நான் எப்போதும் வைத்திருக்கும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.