பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலக கங்குலி முடிவு?

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக, கடந்த 2019, அக்., முதல், இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, செயலராக ஜெய் ஷா ஆகியோர் இருந்து வருகின்றனர். இம்மாதத்துடன் இவர்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இந்நிலையில் பதவியை விட்டு கங்குலி விலகலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, கங்குலி, ஜெய் ஷா மேலும் மூன்று ஆண்டுகள் தங்களது பதவியில் தொடரலாம். இதற்கிடையே பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுக்கான தேர்தல் குறித்து உயர்மட்ட அதிகாரிகள் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாம். இதன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டில்லியில் நடக்கவுள்ளது என்கின்றனர். பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கங்குலி பதவி விலக உள்ளதாக தெரிகிறது

இவருக்குப் பதில் 1983ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ரோஜர் பின்னி, புதிய தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாம். ஆனால் செயலர் பதவியில் ஜெய் ஷா தொடர்வார் என்கின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மன் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதற்கான தேர்தல் வரும் நவ.,ல் நடக்கவுள்ளது. இதன் தலைவர் பதவிக்கு கங்குலி களம் இறங்கலாம் என்று தெரிகிறது. இதனால்தான்
பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருக்கலாம் என்கின்றனர்.