இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக இருந்து, தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன் - முகமது சிராஜ்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முகமது கோஸ் நுரையீரல் நோய் காரணமாக நவம்பர் 20-ம்தேதி காலமானார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ள இந்திய அணியில் சிராஜ் இடம்பெற்றுள்ளார். தந்தையின் மறைவு செய்தியை கேட்டு இடிந்து போன சிராஜ், இந்தியா திரும்ப வாய்ப்பிருந்தும் அணியோடு இருக்க விரும்புவதாக சொல்லிவிட்டார் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என உறுதி ஏற்றுள்ளான் சிராஜ் என அவரது மூத்த சகோதரர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சிராஜ் சகோதரர் இஸ்மாயில் கூறுகையில், ஆஸ்திரேலிய தொடருக்கு அவன் தேர்வாகியிருந்தபோது அப்பாவுக்கு அதை போன் மூலம் சொல்லியிருந்தார். அப்பாவின் இழப்பு செய்தியை அறிந்து அவர் இடிந்து போயுள்ளார். அந்த துயரமான சம்பவத்திற்கு பிறகு போன் செய்யும் போதெல்லாம் அழுது கொண்டே இருக்கிறார் என்று கூறினார்.

மேலும் அவர், எங்களுக்கும் வலி இருந்தாலும் நாங்கள் எல்லோரும் அவரை தேற்றி வருகிறோம். ஆண்டவன்தான் அவருக்கு சக்தி கொடுக்க வேண்டும். கடல் கடந்து உள்ள அவருக்கு நாங்களும் போன் செய்து கொண்டுதான் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். சிராஜின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து குடும்பத்தை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.