ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பும்ரா, முகமது சமி சுழற்சி முறையில் களம் இறக்க முடிவு

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2-ந் தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது.

20 ஓவர் போட்டிகள் டிசம்பர் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஜனவரி 19-ந் தேதியுடன் டெஸ்ட் போட்டி முடிகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் தொடருக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வேகப்பந்து வீரர்கள் பும்ரா, முகமது ‌ஷமி ஆகியோர் அணிக்கு முக்கியமானவர்கள். இதனால் இந்த இருவரையும் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் சுழற்சி முறையில் களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருவரையும் சுழற்சி முறையில் பயன்படுத்தினால்தான் டெஸ்டில் கவனம் செலுத்த முடியும் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. இதன் காரணமாக 20 ஓவர் போட்டிக்கான 11 கொண்ட அணியில் தீபக் சாகர், டி.நடராஜன், நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.