ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து டேவிட் வார்னர் சாதனை

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடியது. முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர், சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில், இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரிகளுடன் 47 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சாதனையும் படைத்துள்ளார். இந்த போட்டியில் டேவிட் வார்னர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.

அவருக்கு முன் விராட் கோலி (5,759), ரெய்னா (5,368) மற்றும் ரோகித் சர்மா (5,149) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். வார்னர் மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் விளையாடி (135), அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை கடந்துள்ளார்.