ஐ.பி.எல். நடப்பு போட்டிகளில் 302 ரன்களை ஓடியே எடுத்த விராட்கோலி

நடப்பு ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலி தான் எடுத்த 460 ரன்களில் 302 ரன்களை ஓடியே எடுத்துள்ளார். இது அவருடைய உடற்தகுதிக்குச் சான்றாக உள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. மும்பை, தில்லி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் அணிகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பஞ்சாப்பின் கே.எல். ராகுலும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தில்லியின் ரபாடாவும் முதலிடம் பிடித்துள்ளார்கள். விராட் கோலி 460 ரன்கள் எடுத்து பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 15 வீரர்களில் குறைந்த பவுண்டரிகள் அடித்தது விராட் கோலி தான். 23 பவுண்டரிகளும் 11 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.

இதனால் தன்னுடைய ரன்களைப் பெரும்பாலும் ஓடியே எடுத்துள்ளார் கோலி. 460 ரன்களில் 302 ரன்களை ஓடி எடுத்துள்ளார். இது அவருடைய உடற்தகுதிக்குச் சான்றாக உள்ளது. அதிக தூரமான பவுண்டரி எல்லைகள் கொண்ட ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் இத்தனை ரன்களை ஓடி எடுத்திருப்பது நிச்சயம் சாதனை தான்.

525 ரன்கள் எடுத்து 3-ம் இடத்தில் உள்ள தவன், 233 ரன்களை ஓடி எடுத்துள்ளார்.