தவறவிட்டது... 4வது முறையாக ஏமாற்றம்... வேதனையில் ஜப்பான் அணி

கத்தார்: உலகக் கோப்பை கால் பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஜப்பான் 4வது முறையாகத் தவற விட்டுள்ளது. இதற்கு முந்திய போட்டிகளில் துருக்கியே, பரகுவே, பெல்ஜியம் ஆகிய அணிகளிடம் தோற்று அவ்வாய்ப்பை இழந்த அந்த ஆசிய அணி தற்போது குரோஷியாவிடம் வீழ்ந்தது.

இம்முறை, குழுப் பிரிவு ஆட்டங்களில் வெற்றிகரமாக முன்னேறிச் சென்ற ஜப்பான், கடைசி 16 அணிகள் சுற்று ஆட்டத்தில் தோற்றது. நேற்றிரவு (டிசம்பர் 5) ஜப்பானும் (Japan) குரேஷியாவும் (Croatia) சந்தித்த அந்த ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து, பெனால்ட்டி மூலம் ஆட்ட முடிவு தீர்மானிக்கப்பட்டது. 3-1 என்ற கோல்கணக்கில் குரேஷியா காலிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட முடிவு ஏமாற்றம்தான் என்றாலும் ஜப்பானுக்குச் சிறந்த எதிர்காலம் இருப்பதாக அணியின் பயிற்றுவிப்பாளர் ஹஜிமே மொரியாஸு (Hajime Moriyasu) கூறுகின்றார்.

கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் அயராமல் உழைத்தோம். ஆனாலும், எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள சற்றுக் கடினமாக இருக்கிறது, என அணித் தலைவர் மாயா யோஷிடா (Maya Yoshida) கூறினார்.

இந்தத் தோல்வியை வருணிக்க வார்த்தைகள் இல்லை. இந்த ஏமாற்றத்திலிருந்து பெற்ற படிப்பினை, ஒரு நாள் நிச்சயம் அணிக்கு ஏற்றம் தரும் என நான் நம்புகிறேன், என அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் யுடோ நகாதோமோ (Yuto Nagatomo) குறிப்பிட்டார்.