சென்னை அபார வெற்றி பெற, பிளேஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறிய பஞ்சாப் அணி

அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் 29, மயங்க் அகர்வால் 26, கெய்ல் 12, பூரன் 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

6-வது வீரராக களம் இறங்கிய தீபக் ஹூடா 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் அடிக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது. லுங்கி நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார். அதன்பின், 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ருத்துராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 82 ரன்னாக இருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 34 பந்தில் 48 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினர். இடையில் இருவரும் தடுமாறினாலும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.

ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிங்ஸ் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததால் 6 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது.