பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 9வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயலஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் 10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்தனர். 13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார். மயங்க் அகர்வால் 50 பந்தில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது. பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயலஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும், ஸ்டீவ் ஸ்மித்தும் விளையாடினர். இதில் சஞ்சு சாம்சன் அதிரடியை வெளிப்படுத்தினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

சாம்சன் 42 பந்தில் 7 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 85 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் ராஜஸ்தான் அணி சாதனை வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் அதிக சேசிங் கொண்ட வெற்றி இதுவாகும்.