ரோகித் சர்மா உடற்தகுதியை நிரூபித்தால் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்; கங்குலி தகவல்

ரோகித் சர்மா உடற்தகுதியை நிரூபித்தால் இந்திய அணியில் அவர் இடம் பெற முடியும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் முடிந்து இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3-வகையான கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரோகித் சர்மா உடற்தகுதியை நிரூபித்தால் இந்திய அணியில் அவர் இடம் பெற முடியும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறுகையில், ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்காக உடற்தகுதி பெற வேண்டும் என நாங்களும் விரும்புகிறோம். ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா இருவரையும் கண்காணித்து வருகிறோம்.

இஷாந்த் சர்மா ஒட்டுமொத்தமாக விலகவில்லை. ஒரு குறிப்பிட்ட நிலையில் அவர் உடற்தகுதி பெற்றால், அவருக்கான இடம் குறித்து தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.