தனது ஓய்வு முடிவை வீடியோ மூலம் அறிவித்த ஷேன் வாட்சன்

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்ற பட்டியலை எடுத்தால் அதில் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் பெயர் இடம் பெற்றிருக்கும். அந்நிய நாட்டுக்காரர் என மனம் ஒத்துகொள்ள முடியாத அளவுக்கு வாட்சன் இந்தியாவோடு ஒன்றிணைந்து விட்டார். இதற்கு காரணம் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடியது தான்.

குறிப்பாக வாட்சனுக்கு சென்னை ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் உண்டு. சென்னை அணியோடு ஒன்றிய வாட்சன், நேற்றைய கடைசி ஆட்டத்துக்கு பின்பு சி.எஸ்.கே. அணி நிர்வாகத்திடம் தான் ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வை வீடியோ மூலம் வாட்சன் அறிவித்தார்.

சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு வீடியோ மூலம் வாட்சன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவர், நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகள் என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான காலம் என்று தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோவை சி.எஸ்.கே. பகிர்ந்துள்ளது.

2018-ல் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் களம் இறங்கிய சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல வாட்சன் முக்கிய காரணமாக இருந்தார். கடந்த சீசன் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன்னில் தோற்கும்போது வாட்சன் கடைசி வரை போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.