ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய அணியில் இடம்பெற முடியாத இரண்டு வீரர்கள்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு வீரர்களின் திறமையை கண்டறிய சிரமமாக இருக்கும். இதனால் ரஞ்சி டிராபி போட்டிகள் நடைபெற இருக்கும் இடத்திற்கு சென்று வீரர்களின் ஆட்டத்தை கவனிக்க வேண்டும். மேலும், விஜய் ஹசாரே போன்ற ஒருநாள் தொடர் நடைபெறும் இடத்திற்கும் செல்வார்கள்.

அதன்பின், ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் திறமையை வைத்து அணியில் சேர்க்கப்படுகிறார்கள். அதன்படி, இந்திய அணிக்கு கண்டெடுத்த தலைசிறந்த வீரர்தான் பும்ரா. இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீச, பின்னர் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் ஹர்திக் பாண்ட்யாவும் அதே போன்றுதான்.

இருப்பினும் சில வீரர்கள் எவ்வளவுதான் விளையாடினாலும் தேர்வாளர்கள் கண்ணில் படுவதில்லை. இந்த அதிர்ஷ்டம் இல்லாத வீரர்கள் இருவர் உள்ளனர். ஒருவர் கொல்கத்தா அணிக்காக விளையாடும் நிதிஷ் ராணா. மற்றொருவர் சூர்யகுமார் யாதவ். இருவரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 10 அரைசதம் அடித்துள்ளனர்.

இருவரும் இதுவரை இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருக்கின்றனர். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பெறாததற்கு பலரும் விமர்சித்து வருகின்றனர்.