திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து ஒரு பார்வை!

தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

திருப்பூரில் பல பழமையான கோவில்கள், முன்னனி நிறுவனங்களின் ஆலைகள் ஆகியவை அமைந்துள்ளன. இந்நகரம் திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாக நகரமாக விளங்குகிறது. மேலும் தமிழ்நாட்டிலுள்ள கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இது நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பல்வேறு நகரங்களிலிருந்து பல மக்கள் இங்குள்ள பல்வேறு துணி உற்பத்தி ஆலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவதற்காகக் குடியேறியுள்ளனர். மக்கள் தொகை எண்ணிக்கையிலும், பரப்பளவிலும், திருப்பூர், தமிழ்நாட்டின் ஏழாவது பெரிய நகரமாக அறியப்படுகிறது.

திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
பல்வேறு வகையான துணி ஆலைகள் மட்டுமின்றி, சோழ, பாண்டிய மன்னர் காலத்திய, பல்வேறு கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. அவிநாசியில் உள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், போன்ற மிகப் பழமையான கோவில்கள் இங்கு உள்ளன.
விஸ்வேஸ்வரஸ்வாமி திருக்கோவில், திருப்பூர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மிகப்பழமை வாய்ந்த கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலில் பூஜிக்கப்படும் சிவலிங்கமானது, காசிக்குப் புனித யாத்திரை மேற்கொண்ட ஒரு அரசனால், இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

சுதந்திரப் போராட்டத்தின் போது, புரட்சிகள் நடந்த இடமாகவும், சுதந்திரப் போராட்ட வீரரும், தேச பக்தருமான திருப்பூர் குமரன் பிறந்த நகரமாகவும், இது புகழ் பெற்று விளங்குகிறது. இவரது நினைவுத் திருவுருவச்சிலை, இந்நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் ஈ.வெ. ராமசாமி மற்றும் சி.என். அண்ணாத்துரை போன்ற மாபெரும் அரசியல் தலைவர்கள், அடிக்கடி, அரசியல் நிமித்தம் சந்திக்கும் இடமாகவும், இந்நகரம் அமைந்திருந்தது.

ஆண்டிப்பாளையம் ஏரி, சிவன்மலை போன்ற சுற்றுலாத்தலங்கள் சுற்றுலாப் பயணிகளைக் அதிகம் கவரும் பகுதிகளாகும். கடல் மட்டத்திலிருந்து 967 அடி உயரத்தில் இருக்கும் இந்நகரமானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், ஆகியவற்றின் இடையே அமைந்துள்ளது. எனவே, துணி உற்பத்தி ஆலைகளுக்கு தேவைப்படும், மூலப்பொருள்களை இங்கு கொண்டு வருவதற்கும், உற்பத்தி செய்யப்பட்ட துணி வகைகளை இங்கிருந்து வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கும், போக்குவரத்து வசதிகள் எளிதாகக் கிடைக்கின்றன.

மிக முக்கிய தொழிற்சாலை நகரமாக இருப்பதால், நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் பல்வேறு மக்கள் இங்கு பணி நிமித்தம் இடம் பெயர்ந்து வந்து வசிக்கிறார்கள். மேலும் அதிவேகமான உற்பத்தியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அதிவேக நகரமாக திருப்பூர் நகரம் விளங்குகிறது.

திருப்பூரின் காலநிலை
திருப்பூர் நகரம் ஆண்டு முழுவதும் சீரான வெப்பநிலையை கொண்டிருப்பதால் வருடத்தில் எந்த பருவத்திலும் இந்நகரத்துக்கு சுற்றுலா வரலாம்.

திருப்பூரை அடையும் வழி
சாலை, ரயில், விமானம் ஆகிய மூன்று போக்குவரத்து வசதிகளின் மூலமாக இந்நகரத்தை எளிதில் வந்தடையலாம். 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோயம்புத்தூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளதால், நாட்டின் எந்த இடத்திலிருந்தும் விமானம் மூலம் இங்கு எளிதில் வந்தடையலாம். துணி உற்பத்திக்கான மிக முக்கிய நகரமாதலால், சாலைப் போக்குவரத்து நாட்டின் அனைத்து நகரங்களையும் திருப்பூருடன் இணைக்கிறது. திருப்பூரில் உள்ள ரயில்வே நிலையத்தின் மூலம் நாட்டிலுள்ள எந்த நகரத்திற்கும் எளிதாகச் செல்லலாம்.