வாங்க போடிமொட்டு சுற்றுலா தலத்திற்கு... மனசு குளிர்ந்து போகும்

சென்னை: போகலாமா செம சுற்றுலா... போடிமெட்டு சுற்றுலா தலம் தேனி மாவட்டத்தில் உள்ள அருமையான இடம். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் எல்லை பகுதியில் இருக்கும் இந்த இடத்தின் சிறப்புகள் பற்றி பார்ப்போம்.

தேனியின் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 31 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த போடிமெட்டுக்கு, தேனியில் இருந்து சென்றால், போடி விளக்கு, கோடங்கிபட்டி, போடியநாயக்கனூர், மந்தல் உள்ளிட்ட பகுதிகளை கடந்தால் போடிமெட்டை அடைய முடியும்.

பயணத்தை பகல் நேரத்தில் தொடங்கினால், முதலில் வெயில் நிறைந்த பகுதியில் இருந்து தொடங்கும் நம் பயணமானது, மலை மேலே செல்ல செல்ல குளிர் வந்து நம்மை தழுவிக்கொள்ளும். ஆங்காங்கே இடது புறம் வியூபாயிண்ட் இருக்கும். வனப்பகுதிகள் ரம்யமாக இருக்கும். பகல் நேரங்களில் வாகனங்களில் செல்வது மிகவும் எளிது. ஆனால், இரவில் செல்ல கூடாது.

போடிமெட்டுக்கு செல்லும் வழியில், இயற்கை அழகை ரசித்துக் கொண்டே, தமிழகத்தில் இருந்து கேரளா பிரியும் பகுதிக்குச் சென்றால், உங்கள் மனதை மயக்கும் இயற்கை காட்சிகளை கண்டு மெய் சிலிர்க்கலாம். நீங்கள் கார் அல்லது பைக்கில் சென்றால் ஆங்காங்கே நிறுத்தி, அழகான வியூ பாயிண்ட்களையும் கண்டு ரசிக்க வசதியாக இருக்கும்.

சாலைகள் பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும். மேலே செல்லச் செல்ல குளிர்ச்சியின் அளவும் அதிகமாகி கொண்டே வருவதை உணரமுடியும். இந்த போடிமெட்டு சாலை பயணம் உங்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்.

மேலே ஏறி போடி மெட்டிற்கு வந்ததால், அங்கே கேரளா மற்றும் தமிழகத்தைப் பிரிக்கும் பகுதியைக் காணலாம். இதன் பிறகு நீங்கள் பயணத்தை தொடங்க விரும்பினால், இடுக்கி மாவட்டத்திற்குள் செல்லாம். அங்கே, பூப்பாறை, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் செல்ல முடியும்.