அமைதியான கடற்கரைக்கு ஒரு சுற்றுலா... பீட்டல் பீச் சென்று வாருங்கள்!

தெற்கு கோவா பகுதிகளிலுள்ள பீட்டல் பீச் ஒரு அமைதியான கடற்கரை. இந்தக் கடற்கரையிலிருந்து கோல்வா பீச் நடந்து செல்லும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது. அதோடு இதன் சுற்றுப் பகுதிகளில் லீலா, தாஜ், ஹாலிடே இன் போன்ற 5 நட்சத்திர ஹோட்டல்கள் இருப்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும், இந்தக் கடற்கரையில் நீங்கள் சுவையான கோவாவின் கடல் உணவை ருசி பார்க்கலாம்.

அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் தங்களுடைய படகுகளில் மீன்பிடிக்கும் காட்சியையும் அவ்வப்போது காண முடியும். பீட்டல் பீச்சில் நீங்கள் சில அற்புதமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு பீட்டல் பீச் மிகவும் சுத்தமாக இருப்பதால் கடல் நீரில் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீந்தித் திளைக்கலாம்.

இதுதவிர பீட்டல் பீச்சில் கிடைக்கும் கோவான் உணவு வகைகள் பயணிகளிடையே வேகுப்பிரசித்தம். கோல்வா பீச்சுக்கு அருகில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் கார் ஓட்டுனர்களுக்கு நன்கு பழக்கப்பட்டவைகள் என்பதால் அந்த இடத்துக்கு உங்களை விரைவாக கொண்டு சென்று விட்டுவிடுவார்கள். அதன் பிறகு பீட்டல் பீச்சுக்கு நீங்கள் நடந்தே சென்று விடலாம்.

இது தவிர நீங்கள் வாடகை கார்கள் அல்லது ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டும் பீட்டல் பீச்சுக்கு செல்லலாம். மேலும், மஜோர்டா மற்றும் மார்கோ ரயில் நிலையங்கள் பீட்டல் பீச்சுக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கின்றன. பீட்டல் பீச் சுற்றி பார்ப்பதற்கு சிறந்த காலநிலையாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்கள் அமைந்துள்ளது.

மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.

இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.