வங்கக் கடலில் நீந்தும் அழகிய அந்தமான் நிக்கோபார் தீவுகள்

ஆண்டின் துவக்கத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுலா செல்வது சிறந்த மகிழ்ச்சியை தரும். திரில்லான பல சாகசங்களும், குதூகலமான நீர்ப் பகுதிகள், அமைதியான ஓய்வெடுக்கும் தளங்கள் போன்ற பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலே உள்ளது. பட்ஜெட்க்கு உள்ளேயே அந்தமான் சென்று வரலாம்.

ஒரு கேமராவும், கொஞ்சம் பணமும் போதும் முடிந்தால் உங்களுக்கு துணையாக ஒருவரும் இப்போதே திட்டமிட்டால் குறைந்த விலையில் அந்தமான் சென்றுவிடலாம். ஆண்டுதோறும் மந்தமான வானிலையுடன் காட்சியளிப்பதால், சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்றது. முடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள், விதவிதமான தாவரங்கள், வித்தியாசமான உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் அழகு இடங்கள் போன்றவை இங்கு உள்ளன.

இங்குள்ள ராதா நகர் பீச் பூமிப் பந்தின் பொன்னுலகம் எனலாம். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தேச, சர்வதேச சுற்றுப்பயணிகள் வந்துபோகிறார்கள். ஸ்குபா டைவிங் எனப்படும் நீருக்கடியில் நீந்தும் விளையாட்டிற்கு இது சிறந்த இடம். உலகிலேயே பவளப் பாறைகள் அதிகம் கொண்ட இடமாக இது உள்ளது.

போர்ட் பிளேர் நகரிலிருந்து 100 கி.மீ தொலைவில் மாங்குரோவ் கிரீக், பாராடாங் தீவு ஆகியவை அமைந்துள்ளன. படகு சவாரி, மாங்குரோவ் காடுகளால் இயற்கையாக உருவான குகைகள் போன்றவை இங்குள்ளன. ராஜிவ் காந்தி நீர் விளையாட்டு அரங்கில் இருந்து 15 நிமிட தூரத்தில் அமைந்துள்ள வடக்கு பே கடற்கரை, போர்ட் பிளேர் உள்ளது. இங்கு கடல் சார்ந்த விளையாட்டுக்கள், கடலுக்கடியில் பயணம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

பார்ப்பதற்கு ரம்மியமான சூழலாக தென்படும் மவுண்ட் ஹரியட்டில் இருந்து மதுபன் வரை உள்ள 16 கி.மீ தூரம் டிரக்கிங் மேற்கொள்ளலாம். இங்கு அரிய வகை தாவரங்கள், பறவைகள், புற்கள் உள்ளன. போர்ட் பிளேர் நகரின் மையத்தில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி நீர் விளையாட்டு அரங்கத்தில் பனானா ரைட்ஸ், ஜெட் ஸ்கைங், பாரா சைலிங், ஸ்பீட் படகு பயணம்போன்ற பல விளையாட்டுகளை விளையாடலாம்.

போர்ட் ப்ளேரின் முக்கியச் சுற்றுலாத்தலம் செல்லுலார் சிறை ஆகும். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் புரட்சி மற்றும் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை இந்திய பெருநிலப்பரப்பில் இருந்து நாடு கடத்தி வங்காள விரிகுடாவின், அந்தமான் தீவில் அடைத்திட கட்டப்பட்ட சிறைச்சாலையே இந்த செல்லுலார் ஜெயில் ஆகும்.