பாலைவன நகரம் துபாயில் உள்ள பிரமாண்ட ஹோட்டல்

துபாய்: சுற்றுலாவுக்கு தகுந்த நாடு... 'பாலைவன நகரம் துபாய்', 'துபாய் எண்ணெய் கிணறு' இப்படியெல்லாம் சொல்லிய காலம் மாறி இப்போது 'சுற்றுலாவுக்குப் பெயர்போன துபாய்' என்று கூறுமளவுக்கு ஆண்டுதோறும் துபாய்க்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடி வருகிறது.

அந்தளவுக்கு பாலைவனத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு டிசைன் டிசைனாக உயரமான கட்டிடங்கள், அலங்கார வடிவமைப்புகள் என சொகுசாக அனுபவிக்க ஏற்ற இடமாக துபாய் விளங்கி வருகிறது.

அதிலும் உலகின் உயரமான கட்டிடமான 2,722 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலீஃபா இருப்பதும் துபாயில்தான். அதுமட்டுமல்லாமல், புர்ஜ் அல் அராப், கேயான் டவர் என சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் துபாயில், புதிதாக பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடிய Atlantis the Royal என்ற பிரம்மாண்ட ஹோட்டல் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளது.

என்ன ஹோட்டல்தானே என்று அசால்ட்டாக நினைத்து விடவேண்டாம். இந்த ஹோட்டலின் சிறப்பம்சங்களைக் கேட்டாலே சும்மா அதிரும் அளவுக்கு ஏகப்பட்ட சொகுசு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. Atlantis the Royal ஹோட்டலில் மொத்தம் 795 அறைகள் உள்ளன.

இந்த விடுதியின் நுழைவாயிலில் ஆரம்பித்து குளியல் அறை சோப்பு வரை எல்லாம் உலகின் விலை உயர்ந்ததையே பயன்படுத்துகிறார்கள். Bellagio-style நீரூற்றுகள், Valentino boutique ஷாப்பிங் என்று உள்ளே போகும்போது மிக அழகாக வரவேற்பு.

விதவிதமான உணவுகள், நீச்சல் குளம், சொகுசு அறைகள், தங்கம் மற்றும் மார்பிளில் உருவாக்கப்பட்டுள்ள அலங்காரப்பொருட்கள் என அனைத்துமே, அங்கு வருபவர்களை திக்குமுக்காட வைக்கிறது. பல்வேறு சொசுகு வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள Atlantis the Royal ஹோட்டலின் மொத்த மதிப்பு சுமார் 10 ஆயிரம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் சொகுசு மாளிகையில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை 1 லட்சம் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 82 லட்ச ரூபாயாம். அந்தளவுக்கு இங்கு எல்லாமே உயர்தர பிராண்டட் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு சொகுசான ஸ்பா வசதியும் வழங்கப்படுகிறது.