மகிழ்ச்சியின் ஆழத்திற்கு இழுத்து செல்லும் ஹேவ்லாக் தீவு!

ஹேவ்லாக் தீவு என்றழைக்கப்படும் இந்த தீவுக்கு காலனிய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய தளபதியாக இருந்த ஹென்றி ஹேவ்லாக் என்பவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக முக்கியமான தீவாக புகழ்பெற்றுள்ள இந்த சொர்க்கத்தீவை நாடி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் வருகின்றனர்.

இந்த தீவில் மொத்தம் ஐந்து அழகிய கடற்கரைப்பகுதிகளை கொண்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கோவிந்தா நகர், ராதா நகர், பிஜோய் நகர், ஷ்யாம் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் என்பவையே அவை. இந்திய நிலப்பகுதியிலிருந்து விலகி பல கிலோ மீட்டர்களுக்கப்பால் உள்ள இந்த சொர்க்க தீவுகளில் இந்தியப்பெயர்களை கேட்கும்போதே வியப்பும் பெருமையும் ஏற்படுவதையும் நம்மால் உணரமுடியும்.

மேற்சொன்னவற்றில் ராதா நகர் கடற்கரையை 'ஆசியாவிலேயே மிகச்சிறந்த அழகான கடற்கரை' என்று 'டைம்' பத்திரிகை 2004ம் ஆண்டில் பிரகடனப்படுத்தியுள்ளது. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கே 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹேவ்லாக் தீவுக்கு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை 'ஃபெர்ரி' சொகுசு படகுகள் இயக்கப்படுகின்றன.

இவற்றுக்கான கட்டணம் சாதாரணமாக 5 முதல் 8 அமெரிக்கன் டாலர்கள் வரை இருக்கலாம். சர்வதேச சுற்றுலாத்தள அடையாளம் உள்ளதால் இப்படி டாலர்களில் கட்டணம் குறிப்பிடப்பட்டிருப்பது தவிர்க்க முடியாததாகிறது. எனினும் இவை குறைவான கட்டணம்தான் என்பது ஒரு ஆறுதலான விஷயம். கட்டுமரப்படகு மூலமாகவும் இயற்கையை ரசித்தபடியே பயணிக்கலாம். ஆனால் இதற்கு கொஞ்சம் கூடுதலாக செலவாகும். நேரம் ரொம்பக்குறைவாக இருக்கிறதே என்பவர்களுக்காக 'பவான் ஹான்ஸ்' ஹெலிகாப்டர் சேவைகளும் போர்ட் பிளேரிலிருந்து ஹேவ்லாக் தீவுக்கு கிடைக்கின்றன.

ஹேவ்லாக் தீவுக்கு சென்றடைந்தபின் கால்நடையாகவே சுற்றித்திரிந்து தீவின் அழகம்சங்களையும், கடற்கரைகளையும், குடில்களையும், கடைகளையும் நிதானமாக பார்த்து ரசிப்பது நல்லது. ராதாநகர் கடற்கரைப்பகுதியில் ஸ்படிகம் போன்று மரகதப்பச்சை ஜொலிப்புடன் மின்னும் கடல்நீருக்கு அடியில் காட்சியளிக்கும் பவளப்பாறை வளர்ச்சிகளை விதவிதமான வடிவங்களில் கண்டு மகிழலாம்.

ஒரு மதிய நேரத்தை இந்த கடற்கரையில் கழித்துவிட்டு உள்ளூர் கடலுணவையும் ருசித்து முடிக்கும்போது 'இது போதும் வாழ்க்கையில்' என்று மனம் கிளர்ச்சியடைவதை உணரலாம். ராதா நகர் கடற்கரைக்கு அருகில் 'எலிபேண்ட் பீச்' என்ற மற்றொரு அழகிய கடற்கரையும் உள்ளது. நடந்தே இந்த கடற்கரைக்கு செல்ல முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் ராதா நகர் கடற்கரையிலிருந்து இந்த 'எலிபேண்ட் பீச்' கடற்கரைக்கும் நடந்து செல்லும் அனுபவம் உங்களை மேகத்தில் மிதப்பது போன்ற உவகைக்கு இழுத்து செல்லும் என்பதிலும் சந்தேகமில்லை.

அப்படி ஒரு இயற்கை ஸபரிசத்தை இந்த கடற்கரை நடைப்பயணத்தில் உங்களால் உணரமுடியும். நடக்க முடியாதவர்கள் 100 ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ மூலமாகவும் செல்லலாம். அது மட்டுமல்லாமல் இங்கு டாக்சி வசதிகள் மற்றும் வாடகை ஸ்கூட்டர்கள் போன்றவையும் 'ஒரு நாள் வாடகை'க்கு குறைந்த கட்டணத்தில் (200 ரூபாய்) கிடைக்கின்றன. சுதந்திரமாக நம் விருப்பம்போல் தீவை சுற்றிவருவதற்கு இந்த வாகன வசதிகள் ஏற்றவையாக உள்ளன.

அந்தமான் தீவுகளின் சிறப்பம்சமான 'ஸ்கூபா டைவிங்' இந்த ஹேவ்லாக் தீவிலும் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இருப்பினும் அதிக ஆழத்திற்கு டைவிங் செய்ய தேவைப்படும் வசதிகளான 'ஸ்பீட் போட்' எனப்படும் அதிவேக மோட்டார் படகுகள் மற்றும் 'டிகம்ப்ரஷன் சேம்பர்கள்' போன்றவை அந்தமான் தீவுகளில் இல்லை.

பொதுவாக, முதல் முறை டைவிங் செய்பவர்கள், கொஞ்சம் அனுபவம் மிக்கவர்கள் மற்றும் நிறைய அனுபவம் உள்ள சாகசவிரும்பிகள் என்று மூன்று தரப்பினருக்கான 'ஸ்கூபா டைவிங்' கடல் மூழ்கு பயண வசதிகள் இந்த தீவில் வழங்கப்படுகின்றன. இவை யாவுமே குறைந்த கட்டணங்களை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஸ்படிகத்தெளிவுடன் காட்சியளிக்கும் நீருக்கடியில் மூழ்கி விதவிதமான வண்ண மீன்கள், கடல் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் வித்தியாசமான தோற்றத்துடன் அசையும் பவளப்பாறை வளர்ச்சிகள் போன்றவற்றை கண்ணுக்கருகே ரசிக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமேயில்லை என்பதை ஹேவ்லாக் தீவில் ஒரு முறை டைவிங் பயணம் மேற்கொண்டபிறகு ஒப்புக்கொள்வீர்கள்.

'ஸ்கூபா டைவிங்'கிற்கு அடுத்தபடியாக டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்துக்கும் இந்த ஹேவ்லாக் தீவு பிரசித்தி பெற்றுள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்காகவே வழிகாட்டிகளின் கூடிய ஒருங்கிணைந்த மலையேற்ற சுற்றுலா சேவைகளை பல்வேறு தனியார் சுற்றுலா நிறுவனங்கள் வழங்குகின்றன. அந்தமான் தீவுப்பிரதேசத்திலுள்ள மற்ற தீவுகளை போல் அல்லாமல் இந்த ஹேவ்லாக் தீவில் தங்கும் வசதிகள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை பல்வேறு கட்டண வசதிகளுடன் அமைந்துள்ளன.

கஃபே டெல் மார் மற்றும் வைல்ட் ஆர்க்கிட் எனப்படும் இரண்டு ஹோட்டல்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. மணலையும், சூரியனையும், மரகதப்பச்சை நீரையும் போதுமென்றளவுக்கு ரசித்தபின் இங்குள்ள பிஜோய் நகர் எனப்படும் கிராமப்பகுதியில் உள்ளூர் ஞாபகார்த்த கைவினைப்பொருட்கள் மற்றும் கடற்சிப்பிகளில் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். மறக்காமல் வேண்டுமென்ற அளவுக்கு இளநீரை ருசி பார்க்கவும் மறக்க வேண்டாம். இது மட்டுமன்றி உற்சாக மதுபானங்கள் மற்றும் பீர் போன்றவையும் இங்குள்ள உணவகங்களில் பரிமாறப்படுகின்றன. இந்திய யூனியன் பிரதேசம் என்பதால் இவற்றின் விலையும் அதிகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.