ஆன்மீக பயணத்தில் ஷிர்டியில் பார்வையிட வேண்டிய முக்கியமான இடங்கள்!!

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சிறிய நகரம் ஷீரடி. இந்தியாவின் புனித இடங்களில் பலராலும் விரும்பப்படும் சக்திவாய்ந்த இடங்களில் ஒன்றாக ஷீரடி. சாய் நிலம் என்றும் அழைக்கப்படும் இது நகரத்தின் மிகவும் முக்கியமான ஷீர்டி சாய் பாபாவின் ஆன்மீக சன்னதிக்கு மிகவும் பிரபலமானது. நீங்கள் உங்களுடைய ஆன்மீக பயணத்தில் ஷிர்டியில் பார்வையிட வேண்டிய முக்கியமான இடங்கள் பற்றி பார்ப்போம்.

ஸ்ரீ ஷீர்டி சாய் பாபா கோயில் ஷிர்டியில் பார்க்க வேண்டிய புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் ரஹதா மாவட்டத்தில் அகமதுநகரில் உள்ள ஷீர்டியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகும். ஸ்ரீ சாய் பாபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் பகல் முதல் இரவு வரை பக்தர்கள் வந்து செல்வதற்கேற்ப திறந்திருக்கும்.

அகமதுநகரிலிருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சனி சிங்னாபூர் ஷீர்டிக்கு அருகே பார்க்க வேண்டிய பல இடங்களில் ஒன்றாகும். பிரபலமான சனி மகாதேவ் கோயிலுக்கு பெயர் பெற்ற சனி சிங்னாபூர் புகழ்பெற்ற சிலை ஒன்றைக் கொண்டுள்ளது. இது கருப்பு கல்லில் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்ட இது திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முக்கியமான சுவாரஸ்யமான விஷயம் சனி ஷிங்கனாபூர் கோயிலைச் சுற்றியுள்ள கிராமத்தில் எந்த வீடுகளுக்கும் கதவுகள் இல்லை. சனி பகவான் மீதுள்ள நம்பிக்கையால் மக்கள் வீடுகளுக்கு கதவுகள் வைப்பதில்லை.

ஷீர்டியின் அருகிலுள்ள சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு முக்கியமான இடம் குருஸ்தான். சாய் பாபா முதன்முதலில் தன்னுடைய 16 வது வயதில் ஒரு வேப்பமரத்தின் கீழ் அமர்ந்து உலகிற்கு காட்சி கொடுத்த இடம் குருஸ்தான். ஒரு இடத்தில் சாய் பாபாவின் உருவப்படம் சிவலிங்கத்துடன் வைக்கப் பட்டுள்ளது.

பக்தர்களுக்கு ஷிர்டியில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்று துவாரகமாய். சாய் பாபா தனது கடைசி தருணங்கள் உட்பட தனது வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை கழித்த இடமாக இருப்பதால், துவாரகாமை ஷீர்டியின் இதயம் என்று மக்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

ஒரு புனித யாத்திரை தலம் மற்றும் சுற்றுலா தலத்தின் கலவையாக இருப்பதால், சாய் ஹெரிடேஜ் வில்லேஜ் ஒரு அழகான தீம் பார்க் ஆக இருக்கிறது. இது ஜூலை 2014 இல் நிறுவப்பட்டது. ஷீரடியில் பார்வையிடும் எல்லா இடங்களிலும் மிகவும் சிறந்ததாக கருதப்படும் இந்த கிராமம் சாய்பாபாவை பற்றிய பல சிலைகளை காட்சிப்படுத்துகிறது.

மாருதி மந்திர் என்று புகழ்பெற்ற இந்த ஹனுமான் மந்திர் ஷீர்டியில் உள்ள மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது துவார்கமாய் மசூதிக்கும் சாவடிக்கும் இடையில் அமைந்துள்ளது. ஷீர்டிக்கு அருகிலுள்ள சிறந்த இடங்களுள் ஒன்றான இது நீங்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய இடம். இது ஷீரடியின் மௌலி என்னும் இடம் அருகே உள்ளது.

வெட் என் ஜாய் வாட்டர் பார்க் இது ஆன்மீகம் சம்பந்தம் இல்லாத இடமாக இருந்தாலும் குழந்தைகள் சந்தோஷமாக இருக்க ஒரு அற்புதமான இடமாகும். 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வெட் என் ஜாய் வாட்டர் பார்க் ஷிர்டியில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்றாகும். விறுவிறுப்பான விளையாட்டு சவாரிகள், பெரிய அலைகள் ஏற்படும் குளங்கள், மழை நடனம் மற்றும் இன்னும் பல வேடிக்கையான நிகழ்ச்சிகள் இடம்பெறும் இந்த கேளிக்கை பூங்கா குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானது. குழந்தைகளோடு கொஞ்சம் இளைப்பாற இது உங்களுக்கு சிறந்த இடமாகும்.