மறக்க முடியாத சுவாரசியமான அனுபவங்கள் தரும் ஜாலி பாய் தீவு!

அந்தமான் நிகோபார் தீவுகள் கூட்டத்தில் இருக்கும் மற்றொரு தீவு ஜாலி பாய் தீவு. போர்ட் பிளேருக்கு மிக அருகிலேயே இந்த தீவு உள்ளது. 'மகாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்' அல்லது 'வாண்டூர் நேஷனல் பார்க்' எனப்படும் கடல்சார் தேசியப்பூங்காவின் ஒரு அங்கமாக வீற்றுள்ள இந்த தீவுப்பகுதியில் சில அரிய வகை பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் கண்டு களிக்கலாம். அது மட்டுமல்லாமல் வைரம் போல் ஜொலிக்கும் தூய மணற்பரப்பு மற்றும் மரகதப்பச்சை ஸ்படிக நீர்ப்பரப்பு போன்றவற்றை இந்த தீவின் கடற்கரைகள் கொண்டுள்ளன. மேலும் பயணிகளுக்கு அதிர்ஷ்டம் இருப்பின் டால்பின்களையும் இந்த தீவுப்பகுதியில் தரிசிக்க வாய்ப்புண்டு.

அந்தமான நிக்கோபார் தீவுகளின் இருப்பிட உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சியாக 'மகாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்' திட்டம் இந்திய வனத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. 150 தீவுகளை உள்ளடக்கியுள்ள இந்த கடல்சார் தேசியப்பூங்கா சுமார் 280 ச.கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. இந்த தீவுகளில் ஜாலி பாய் தீவு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஜாலி பாய் தீவை நோக்கி பயணிக்கும் அனுபவமே உங்களை மெய்மறக்க வைத்துவிடும் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு சுவாரசிய உண்மையாகும்.

வனத்துறையிடமிருந்து நுழைவு அனுமதியை பெறவும் ஃபெர்ரி கட்டணமாகவும் முறையே ரூ 50 மற்றும் ரூ500 கட்டணத்தை போர்ட் பிளேர் துறைமுகத்திலேயே நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் கண்களால் பருகப்போகும் இயற்கை விருந்துக்கு இந்த கட்டணம் மிக மிக குறைவு என்பதை பயணத்தின்போது புரிந்துகொள்வீர்கள். பல அழகிய தீவுகளின் வழியாகவும், நீலப்பச்சை நீர்ப்பரப்பின் ஊடே நீளும் இந்த ஃபெர்ரி பயணத்தில் கூடவே வரும் வழிகாட்டிகள் ஆங்காங்கு காணப்படும் எழில் அம்சங்கள், தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்களை சுட்டிக்காட்டி விளக்குகின்றனர்.

ஜாலி பாய் தீவில் சொகுசுப்படகுக்கான துறைமுகம் இல்லாததால் தீவுக்கு அருகாமையில் பயணிகள் வேறு சிறிய படகுகளுக்கு மாற்றப்பட்டு தீவில் இறக்கிவிடப்படுகின்றனர். இந்த சிறு படகுகளின் அடிப்பாக ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் நன்றாக ரசிக்கலாம். ஆழம் குறைவான இந்த கடற்கரைப்பகுதியில்தான் இந்த இரண்டு அம்சங்களும் பளிச்சென்று காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போல் சொர்க்கம் போன்ற கடல் காட்சிகளை வேறு எங்குமே இந்திய நிலப்பரப்பின் ஓரம் பார்த்திருக்க முடியாது என்பதால் இந்த படகுப்பயணத்தின் ஒவ்வொரு கணமும் பயணிகளின் மனதில் சிலிர்ப்பூட்டும் பதிவுகளாக பதியப்படும் என்பது நிச்சயம். மேலும், இந்த ஜாலி பாய் தீவுப்பகுதியில் சில நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றவும் வேண்டியுள்ளது. இங்கு பயணிகள் தங்களது உணவையோ நீரையோ எடுத்துவர முடியாது. போர்ட் பிளேரில் படகில் ஏறும்போது அவர்களுக்கு வனத்துறையால் வழங்கப்படும் உணவை மட்டுமே இங்கு எடுத்து வர முடியும்.

தீவின் கன்னித்தன்மை கெடாது பாதுகாக்க மேற்கொள்ள எடுக்கப்படும் இந்த முயற்சிகளை பயணிகளை நன்றாக புரிந்துகொள்ள முடியும். அப்பழுக்கற்ற கடற்கரைகளும், தேவர்களுக்காக உருவாக்கப்பட்டது போன்ற குடில்களும் ஈடன் தோட்டம் போன்ற சூழலும் பயணிகளை கரைந்துருக செய்துவிடும் வல்லமை படைத்தவை. இப்படிப்பட்ட எழில் பூமியில்தான் மனித இனம் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறதா என்று மருகிப்போக வைக்கும் மயக்கு சக்தி இங்கே நிரம்பி வழிகிறது. தேனிலவுப்பயணம் வந்திருப்போர் ஒரு மதிய நேரத்தை இந்த தீவில் கழிப்பது அவர்கள் வாழ்வில் நீங்காத நினைவாய் இடம் பெறும்!