2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை

இந்தியாவின் தொன்மையான நகரங்களுள் ஒன்றான மிகவும் பழமையான மதுரை, வைகை ஆற்றங்கரையில் அழகிய சுற்றுப் புறத்துடன் கூடிய அமைப்பில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் 44வது மிகப் பெரிய நகரமும் ஆகும். 2500 ஆண்டுகளுக்கு முன்பே உருவான மதுரை, அறிஞர்கள் பலர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடமாகும். சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராஜ்ஜியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.

மதுரை மாநகரமானது இரவிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பதால் தூங்கா நகரம் எனும் பெயரால் அறியப்படுகிறது. மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. இங்கு கிடைக்கும் ஜிகர்தண்டா எனும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.

மதுரையின் மிக முக்கியமான அம்சம் மீனாட்சி அம்மன் கோவில் ஆகும். பார்வதி அம்மனுக்குரிய கோவில் மீனாட்சி எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் அதிசயங்களில் ஒன்றாக இதன் கட்டிடக் கலைக்காகவே இந்த கோவிலைச் சேர்க்கவேண்டும். இந்த கோவிலின் முதன்மை கடவுள் சுந்தரேஸ்வரர் ஆவார். மீனாட்சி அம்மன் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கி பி 1636ம் ஆண்டு திருமலை நாயக்கர் அரண்மனை பொக்கிஷத்தைக் கட்டியுள்ளார். இந்தோ சரசனிக் கட்டிடக் கலை வடிவமைப்பில் இத்தாலிய கட்டிடக் கலைஞர் ஒருவரால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் 248 பிரம்மாண்ட கோபுரங்களைக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது. 1971ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த இடம் சுற்றுலா வளர்ச்சிக்காக ஒலி ஒளி காட்சிகள் அமைக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.


மதுரையிலிருந்து 21 கிமீ தொலைவில் இருக்கும் அழகர் மலையில் அமைந்துள்ளது இந்த அழகர் கோவில். இதற்கு சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் எனும் பெயர்களும் உண்டு. பாண்டியர்களும், விஜயநகர மற்றும் மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோர் இந்த கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். கல்யாண சுந்தரவல்லி தாயார் சந்நிதி கலை நயம் மிகுந்து அழகாக அமையப் பெற்றுள்ளது.

மதுரையிலிருந்து 12 கிமீ தொலைவில் மதுரை - தேனி வழியில் இருக்கும் நாக மலை சமண மலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு தமிழி கல்வெட்டுக்களும், சமண படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. சமணர் மலையின் தென் மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடப்புறம் பாறையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள மகாவீரர் சிலை உள்ளது. இதே மலையில் இயற்கையாக அமைந்து சுனை ஒன்று, பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.

1959ம் ஆண்டு இந்த காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இங்கு காந்தியின் நினைவாக பல பொருள்கள் வைக்கப்பட்டுள்ளது. நாதுராம் கோட்சே என்பவனால் கொல்லப்பட்டபோது காந்தியடிகள் அணிந்திருந்த மேல் துண்டு ரத்தக் கறையோடு இங்கு வைக்கப்பட்டுள்ளது. ராணி மங்கம்மாள் அரண்மனை, காந்தி அருங்காட்சியகத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுவப்பட்டது. இது 1959ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் திறக்கப்பட்டது.

மதுரையிலிருந்து பதினைந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை. இது சோலை மலை என்றும் அழைக்கப்படுகிறது. ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்த இடம் இதுவாகும். அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள்.