இயற்கை காதலர்களா? கண்டிப்பா ஒருமுறை அகும்பே சென்று வாருங்கள்!

அரபிக் கடலில் சூரியன் அஸ்த்தமனமாகும் கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமான ஊர் அகும்பே. அகும்பே மால்நாடு பகுதியில் உள்ள மகாகவி குவெம்புவின் சொந்த ஊரான தீர்த்தஹள்ளி தாலுக்காவில் அமைந்துள்ளது.

அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும். அகும்பேவில் உள்ள 'அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்' தான் இந்தியாவிலுள்ள மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையங்கிளிலேயே நிரந்தரமானது ஆகும். இங்கு பலவகைப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. அதோடு இங்கு மருத்துவ மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

அகும்பேவின் அமைதிக்காகவும், அங்குள்ள அழகிய அருவிகளை காணவும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களிலிருந்து திரள் திரளாக வருகின்றனர். மூன்று கிலோ மீட்டர் சுற்றளவே கொண்ட அகும்பேவில் ஐநூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர்.

சாகசப் பயணம் செல்ல விரும்பும் இயற்கை காதலர்களுக்கு அகும்பே ஒரு வரப்பிரசாதம். அகும்பேவின் காடுகள் ராஜநாகத்துக்கும், பல்வேறு கொடிய பாம்புகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. அகும்பேவிற்கு அருகில் உள்ள ஓநேக் அபி அருவி, பர்கானா மற்றும் குஞ்சிகள் அருவி, ஜோகிகுண்டி, கூட்லு தீர்த்த அருவி போன்றவை சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய அருவிகள்.

உடுப்பி ரயில் நிலையம் அகும்பேவிர்க்கு மிக அருகிலேயே இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் சுலபமாக இலக்கை வந்தடையலாம். அகும்பேவில் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற வகையில் விருந்தினர் மாளிகைகளும், சுவையான உணவு விடுதிகளும் மலிவான விலைகளில் ஏராளமாக உள்ளன.