இந்தியாவில் உள்ள மிக முக்கியமான 3 பெரிய அணைகள்!

இந்தியாவில் சிறியதும், பெரியதுமாக ஏராளமான அணைகள் உள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள பல அணைகள் மிகப் பெரியதாகவும், அதிக உயரம் கொண்டதாகவும், அதிக நீளம் கொண்டதாகவும், அதிக கொள்ளளவு கொண்டதாகவும், மிகவும் பழமை வாய்ந்ததாகவும் உள்ளது. அப்படி நம்முடைய இந்தியாவில் உள்ள மிக முக்கியமான 3 பெரிய அணைகளை தெரிந்து கொள்வோம்.

தெஹ்ரி அணை
இந்தியாவின் மிகப்பெரிய அணை என சொல்லப்படும் தெஹ்ரி அணை உத்தரகண்ட் மாநிலத்தில் பாகீரதி நதியின் குறுக்கே அமைந்துள்ளது. 261 மீட்டர் உயரமும், 575 மீட்டர் நீளமும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய அணை இது. இந்த அணை 1978 ஆம் ஆண்டில் கட்டுமானம் தொடங்கப்பட்டது. பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் 2006 ஆம் ஆண்டில் கட்டுமானம் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.

2 லட்சம் ஏக்கர் அடி கொள்ளளவு கொண்ட அணையில் இருந்து வரும் தண்ணீர் பாசன தேவைகளுக்கும், நகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தபடுகிறது. இந்த அணை 4 கன கிலோ மீட்டர் அதாவது 3,200,000 ஏக்கர் பரப்பளவில் 52 சதுர கிலோ மீட்டர் அதாவது 20 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது.

பக்ராநங்கல் அணை
பக்ரா அணை எனவும் அழைக்கப்படும் பக்ராநங்கல் அணை இமாச்சல பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 225 மீட்டர் உயரமும், 520 மீட்டர் நீளமும், 9.1 மீட்டர் அகலமும் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த மற்றும் மிகப்பெரிய அணை இது. இந்த அணையின் நீர்த்தேக்கமான கோபிந்த் சாகர் ஏரி 7,501,775 ஏக்கர் அடி கொள்ளளவு கொண்டது.

இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கம் ஆகும். அணை கட்டுமானம் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு அணையின் கட்டுமானப் தொகை 245.28 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

சர்தார் சரோவர் அணை
சர்தார் சரோவர் அணை குஜராத் மாநிலத்தில் நவகம் என்ற இடத்தின் அருகில் கெவாடியாவில் உள்ள நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்ட அணை. நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவர் அணை தான் மிகப் பெரியது. இந்த அணையின் உயரம் சுமார் 163 மீட்டர்கள். அணையின் நீளம் 1210 மீட்டர்கள். அணையின் கட்டுமானம் 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2017 ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது.

இந்த அணையில் இருந்து நீர் மற்றும் மின்சாரம் குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களுக்கு கிடைக்கிறது. இந்த அணையில் இருந்து கிடைக்கும் நீர் மூலமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது.