கோட்டை ஈஸ்வரன் கோயிலில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை

தங்க கொடிமரம் பிரதிஷ்டை... ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயிலில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழா, இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் மற்றும் கோட்டை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களின் கொடிமரங்களும் பழுதானதால், அவற்றுக்கு பதிலாக புதிய கொடிமரங்களை செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தனியார் பங்களிப்புடன் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 புதிய தங்க கொடிமரங்கள் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. இந்த பணி நிறைவடைந்ததை அடுத்து இன்று கோட்டை ஈஸ்வரன் கோவிலில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கங்காதரன், கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கிரேன் உதவியுடன் புதிய கொடிமரத்தை கோயிலில் பிரதிஷ்டை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து வரும் 13ஆம் தேதி கோட்டை பெருமாள் கோவிலில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.