இந்த 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்யலாம்

சதுரகிரி : அண்மை காலமாக பக்தர்கள் அதிகளவில் யாத்திரையாக செல்லும் தலமாக விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலை அமைந்து உள்ளது. இங்கு சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ள நிலையில் மாதத்தில் பௌர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் இங்கு மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்று. அமர்நாத், கேதார்நாத் போன்ற யாத்திரைகளுக்கு செல்ல முடியாதவர்கள் கூட இங்கு மழையேறினால் அதற்கு ஈடான பலன் கிடைக்கும் என கூறப்படுவதால் மாதம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

சதுரகிரி மலையில் ஏற நல்ல உடல் வலிமை , மனவலிமை இருக்க வேண்டும். இந்த நிலையில் வருகிற 1ஆம் தேதி பிரதோஷம் மற்றும் 3ம் தேதி ஆனி மாத பௌர்ணமி வருவதை ஒட்டி சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்யலாம். பத்து வயதுக்குட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மலையேற அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து காலை ஏழு மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு வரக்கூடாது , மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது, இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை எனவும் வனத்துறை கூறியுள்ளது.

இந்த மாதம் சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் தேவைக்காக குடிநீர் உள்ளிட்ட வசதிகளை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது.