கார்த்திகையில் செவ்வாய் தினத்தன்று முருகனை வணங்கினால் காரிய வெற்றி கிடைக்கும்

கார்த்திகை மாதத்தில் முருகனுக்கு உகந்த கிழமையான செவ்வாயில் முருகனை மனதார வணங்கிட எடுத்த காரியம் யாவிலும் வெற்றி அடையலாம்.

கார்த்திகை மாதம் தீபங்களின் மாதம். தீபங்களையும், அதில் ஏற்றப்படும் ஜோதியினையும் வழிபடுவது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. கார்த்திகையில் அவதரித்தவர் முருகப் பெருமான். அதனால் முருகனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் முருகனுக்கு உகந்த கிழமையான செவ்வாயில் முருகனை மனதார வணங்கிட எடுத்த காரியம் யாவிலும் வெற்றி அடையலாம்.

இன்றைய தினத்தில் வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்ய வளமும் நலமும் தந்து அருளுவான் வெற்றிவேலன் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.

செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் பூமிகாரகன்.இந்த நாளில் முருகப்பெருமானை மனதார வணங்கி வழிபட வீடு மனை வாங்கும் யோகம் உருவாகும் என்பது ஐதீகம். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் முருகக் கடவுளை செவ்வரளி மாலை சார்த்தினால் தோஷம் நீங்கப் பெறுவார்கள்.

கல்யாணம் கைகூடும். காலையிலும், மாலையிலும் வீடுகளில் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம், முருகன் துதிகள் பாராயணம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.