திருப்பதி கோயிலில் சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளல்

சின்ன சேஷ வாகனம் எழுந்தருளல்... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 2ம் நாள் பிரம்மோற்சவ விழாவில், காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி அருள்பாலித்தார்.

கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் சனிக்கிழமையன்று மாலை கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து இரவு ஆதிசேஷனாக கருதப்படும் 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் காட்சியளித்தார்.

கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர்கள், கோயிலுக்குள் உள்ள சம்பங்கி மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுவாமிக்கு ஒரு மணி நேரம் வரை சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, நேற்று காலை வாசுகியாக கருதப்படும் 5 தலை கொண்ட சின்ன சேஷவாகனத்தில், கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்பர் அலங்கரிக்கப்பட்டு, ரங்கநாயக மண்டபத்தில் காட்சியளித்தார். அதன் பின்னர் மீண்டும் சம்பங்கி மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். மாலை சிறப்பு திருமஞ்சனமும், இரவு அன்ன வாகன சேவையும் ஏகாந்தமாக நடந்தது.

இதில் ஜீயர்கள், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, உட்பட உயர் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.