அமேசான் இந்தியா நிறுவனத்தில் 50 ஆயிரம் தற்காலிக பணி

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தன. தற்சமயம் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் விற்பனை தளங்கள் மீண்டும் செயல்பட துவங்கி இருக்கின்றன.

இதனால் இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாடு அதிகரித்து வருவதை தொடர்ந்து தட்டுப்பாடு சூழலை தவிர்க்கும் நோக்கில் அமேசான் இந்தியா நிறுவனம் 50 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பொருட்களையும் கொண்டு சேர்க்க விரும்புகிறோம் என அமேசான் நிறுவன மூத்த அதிகாரி அகில் சக்சேனா தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கை மூலம் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை மக்கள் எதிர்கொள்ள வழி செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்காலிக பணியாளர்கள் அமேசான் மையங்கள் மற்றும் டெலிவரி குழுவில் பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமேசான் நிறுவனம் ஊழியர்களை பணியமர்த்தும் முடிவினை அறிவித்துள்ளது.