வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொண்டு வருகின்றன.

இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.

3 மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலையை உயர்த்தாத எண்ணெய் நிறுவனங்கள் தற்போது தேர்தல் முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இந்த மாதம் அதாவது (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் ரூ. 2,268க்கு விற்பனை செய்யப்படுகிறது.