வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

சிறப்பான விற்பனை... நவராத்திரி பண்டிகையின் 10 நாட்களில் மட்டும் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் விற்பனை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை கால விற்பனை நம்நாட்டில் களைகட்டும். அந்த சமயத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் முக்கிய நுகர்வோர் சாதனங்களை பெரும்பாலான மக்கள் வாங்குவது வழக்கம். இதனால் பண்டிகை காலத்தை மனதில் வைத்து பல நிறுவனங்கள் பொருட்களை அறிமுகப்படுத்துவதும், தள்ளுபடிகளை அறிவிப்பதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளன. இந்நிலையில் கடந்த நவராத்திரி பண்டிகையின் பத்து நாட்களில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் விற்பனை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக பானாசோனிக், எல்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை 30 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பெற்றுள்ளன.

இது குறித்து பானாசோனிக் நிறுவனத்தின் இந்திய பிரிவுத்தலைவர் மனிஷ் சர்மா கூறுகையில், ஏசி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், மைக்ரோ வேவ் ஓவன், போன்ற பிரிவுகளில் விற்பனை 30 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் எல்இடிக்கான தேவை வினியோக அளவை விட அதிகமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் நுகர்வோர்கள் அதிகளவில் ஆன்லனை மூலமாக பொருட்கள் வாங்குவதேயே தற்போது விரும்புவதாக குறிப்பிட்ட அவர், ஆன்லைன் தளங்கள் மூலமாக நடைபெறும் விற்பனை இந்த முறை 11.7 மடங்கு அதிகரித்து காணப்பட்டதாகவும் தெரிவித்தார். இதே கருத்தை பிரதிபலிக்கும் விதமாக கூறிய எல்ஜி நிறுவனத்தின் துணைத்தலைவர் விஜய் பாபு, நவராத்திரி பண்டிகையின் போது, எல்ஜி நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை 31 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்

பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் இரண்டு இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சோனி நிறுவனத்தின் எல்இடி டிவி விற்பனையும் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதை உறுதிப்படுத்தி உள்ள சோனி நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கான நிர்வாக இயக்குனர் சுனில் நாயர், 55 இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட பெரிய திரை கொண்ட டிவிக்களின் விற்பனை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

வீடுகளிலேயே இருக்கும் சூழலில் மக்கள், பெரிய திரைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.