புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் வெளியீடு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைப்பு

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆன விவரங்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு உற்பத்தியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்திலும் லீக் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இத்துடன் 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் SM-M515F_DSN எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான ப்ளூடூத் சான்று விண்ணப்பம் மே மாதத்தில் சமர்பிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ப்ளூடூத் மட்டுமின்றி ஸ்மார்ட்போனின் இதர விவரங்களும் தெரியவந்துள்ளது.

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்40 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என தெரிகிறது. இவைதவிர புதிய சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபிளாட் டிஸ்ப்ளே, 128 ஜிபி மெமரி மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.