இந்தியா மக்களுக்கு உதவி கரம் நீட்டி நிவாரணம் அளித்தது சாம்சங் நிறுவனம்

கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் எல்லாமே போராடிக் கொண்டு இருக்கிறது. ஏகப்பட்ட உயிர் இழப்புகள், மேற்கொண்டு புதிதாக கொரோனா தொற்றுவது என செய்திகள் மக்களை கதிகலங்க செய்து வருகிறது.

இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின் பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களின் உதவிக் கரத்தை நீட்டி இருக்கின்றன.
டாடா, ரிலையன்ஸ், விப்ரோ, மஹிந்திரா என இந்தியாவின் டாப் கம்பெனிகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.


இந்த வரிசையில் தற்போது, தென் கொரியா நாட்டைச் சேர்ந்த, ஸ்மார்ட்ஃபோன்களைத் தயாரிக்கும் சாம்சங் நிறுவனமும் இணைந்து இருக்கிறது. சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனம் சுமார் 15 கோடி ரூபாயை பிரதமரின் கேர்ஸ் (PM CARES) திட்டத்துக்கு நன்கொடையாகக் கொடுத்தது.

இப்போது மேலும் 20 கோடி ரூபாயை, இந்தியாவின் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு கொடுத்து உதவ ஒதுக்கீடு செய்து இருக்கிறார்களாம். அதை அவர்களின் செய்திக் குறிப்பிலேயே சொல்லி இருக்கிறார்கள். இதை எல்லாம் விட மிக முக்கியமான ஒரு விஷயத்தை, பிரத்யேகமாக தமிழகத்துக்குச் செய்து இருக்கிறது சாம்சங்.

சாம்செங் நிறுவனத்துக்கு இந்தியாவில், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு உற்பத்தி ஆலை இருக்கிறது. தமிழகத்துக்கு என்று தனியாக 2 கோடி ரூபாயை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு (Tamil Nadu State Disaster Management Authority) நன்கொடையாக வழங்கி இருக்கிறது.

இது போக, சாம்சங் நிறுவனம், கணிசமான அளவில் மளிகை பொருட்களையும் அரசு அதிகாரிகளிடம் வழங்கி இருக்கிறதாம். இந்த மளிகை பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து காஞ்சிபுரம், கடலூர் போன்ற மாவட்டங்களுக்கு வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.

தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு தொடர்ந்து உதவுகிறோம், அதோடு, சாம்சங் நிறுவனம் மேற்கொண்டு எப்படி இந்த இக்கட்டான நேரத்தில் பங்களிப்பது என, உள்ளூர் அதிகாரிகளோடும் கலந்து பேசிக் கொண்டு இருக்கிறது என சாம்சங் இந்தியா நிறுவனத்தின் கார்ப்பரேட் துணைத் தலைவர் பீட்டர் ரீ சொல்லி இருக்கிறார்.