பட்ஜெட் பிரிவில் களமிறங்க இருக்கும் ஒன்பிளஸ்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பட்ஜெட் பிரிவில் களமிறங்க இருப்பதாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தைக்கென புதிய திட்டமிடல் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் இந்திய சந்தையில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். குறைந்த விலை மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், தொடர்ந்து பிரீமியம் மாடல்கள் ஒன்பிளஸ் தரத்துக்கு இணையாக வெளியிடப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

பட்ஜெட் பிரிவில் ஒன்பிளஸ் வரவு சியோமி நிறுவனத்துக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் ஒன் மாடலுடன் 2014 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் களமிறங்கியது. இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் சிறப்பம்சங்களை கொண்டிருந்தது.

முதல் ஸ்மார்ட்போனே ஃபிளாக்ஷிப் கில்லர் சிறப்பம்சங்களுடன் ரூ. 21, 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அப்போது அறிமுகமாகி இருந்த சாம்சங் கேலக்ஸி எஸ்5 மாடலின் ரூ. 51,500 விலையை விட பெருமளவு குறைவு ஆகும்.