கொரோனா ஊரடங்கால் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்தது

கடந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்தது... தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம், பெட்ரோல் விற்பனை 57%, டீசல் விற்பனை 70% சரிந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகம் முழுவதும், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான 5,035 விற்பனை நிலையங்கள் உள்ளன.

அவற்றின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம், 12.3 கோடி லிட்டர் பெட்ரோலும், 14.34 கோடி லிட்டர் டீசலும் விற்பனையாகி உள்ளது. ஆனால், கடந்த ஆண்டில் இதே மாதம், தமிழகத்தில் 29.16 கோடி லிட்டர் பெட்ரோலும், 48.5 கோடி லிட்டர் டீசலும் விற்பனையாகி இருந்ததாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதே நேரம், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 26.4 கோடி லிட்டர் பெட்ரோலும், 38.9 கோடி லிட்டர் டீசலும் விற்பனையாகியுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டதே, பெட்ரோல், டீசல் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்ட காரணம் என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் கொரோனாவால் ஏற்பட்ட ஒரே நன்மை சுற்றுச்சூழல் மாசு குறைந்ததுதான் என்கின்றனர் இயற்கை நல ஆர்வலர்கள்.