சேவைகள் துறை வளர்ச்சி வரலாறு காணாத அளவுக்கு சரிவு

மும்பை: வரலாறு காணாத சரிவு... நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில், வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்து வணிக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

'ஐ.எச்.எஸ்., மார்க்கெட் இந்தியா' நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், கடந்த ஏப்ரல் மாதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, ஏப்ரல் மாதத்தில் மிகப் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், அனைத்து வணிகங்களும் மூடப்பட்டு, ஸ்தம்பித்து விட்டன. மேலும், தேவையும் பெருமளவு குறைந்து விட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, 5.4 புள்ளிகளாக வீழ்ச்சியை கண்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சி, கடந்த, 85 மாதங்களில் இல்லாத அளவு சரிந்து, 49.3 புள்ளிகளாகஇருந்தது. இப்போது அதிலிருந்தும் தலைகீழாக சரிந்து, 5.4 புள்ளிகள் என்ற அதலபாதாள நிலைக்கு சென்று விட்டது. இந்த சேவைகள் வளர்ச்சி குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். சேவைகள் துறையின் வளர்ச்சி குறியீடு குறித்த கணக்கீடு, கடந்த, 2005ல் துவங்கப்பட்டது.துவங்கிய, 15 ஆண்டுகளில் இதுவரை இப்படி ஒரு சரிவு காணப்படவில்லை.

உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த கூட்டு, பி.எம்.ஐ., குறியீடு, ஏப்ரல் மாதத்தில், 7.2 புள்ளிகளாக வீழ்ந்துள்ளது. இதுவே, கடந்த மார்ச் மாதத்தில், 50.6 புள்ளிகளாக இருந்தது. பன்னாட்டு விற்பனை முற்றாக சரிந்ததை அடுத்து, அதன் குறியீடு, 0.0 புள்ளிகளாக உள்ளது. வேலைவாய்ப்பை பொறுத்தவரை, வணிக தேவைகள் குறைந்ததை அடுத்து, சில சேவை நிறுவனங்கள், இரண்டாவது காலாண்டில், சிறிது ஆட்குறைப்பு முயற்சிகளை எடுத்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மற்றபடி, ஆய்வில் பங்கேற்ற, 90 சதவீத நிறுவனங்களில், ஊழியர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என, தெரிய வந்துள்ளது. உற்பத்தி மற்றும் உள்ளீட்டு விலைகள், மார்ச் மாதத்தை விட அதிகம் சரிந்துள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, பணவாட்டத்தை பொறுத்தவரை, சேவைகள் துறையை விட, தயாரிப்பு துறையில் பாதிப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.