கமலுடன் பங்கேற்க முடியாத நிகழ்வு... ஜெயம் ரவி கொடுத்த விளக்கம்

சென்னை: கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் மணிரத்னம் இயக்கிய படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா, விக்ரம் படங்களைப் போல தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் இந்தப் படம் பெரிதும் வசூலிக்கவில்லை. கதையின் சூழலை மற்ற மாநிலத்தவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் திரையரங்கு ஒன்றில் விக்ரம், கார்த்தி ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படம் பார்த்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது படக்குழவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டினார். அப்போது அவரிடம் வெற்றிமாறனின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், ராஜ ராஜசோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது, சைவம் மற்றும் வைணவ மதங்கள் தான் இருந்தன என்று பேசினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கமலுடனான சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்த நடிகர் விக்ரம், இவரது குரல் பொன்னியின் செல்வனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது அதே குரல் படம் குறித்த அன்பை வெளிப்படுத்துகிறது. நன்றி கமல்ஹாசன் சார் என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் இதில் தான் பங்கேற்காது குறித்து நடிகர் ஜெயம் ரவி வருத்தம் தெரிவித்துள்ளார். நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் எங்களை பெரும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நான் வெளிநாட்டில் இருப்பதால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. நன்றி கமல் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.