இயக்குனர் ஹரிக்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் அருண் வைத்தியநாதன்

இயக்குனர் ஹரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்துள்ளார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.

சாத்தான்குளம் போலீஸ் தாக்குதல் நடத்தியதில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய தந்தை - மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதற்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி பாலிவுட் சினிமா நட்சத்திரங்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இயக்குனர் ஹரி நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே.

காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன் என ஹரி கூறி இருந்தார். இந்நிலையில் ஹரி இப்படி ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் சாடி இருப்பதை இயக்குனர் அருண் வைத்தியநாதன் விமர்சித்துள்ளார். அவர் தனது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது:

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் அதே அளவுக்கு, ஒட்டுமொத்த போலீஸ் துறையினரும் கெட்டவர்கள், காட்டு மிராண்டித்தனமானவர்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கோவிட் 19 பரவ துவங்கிய நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் போலீஸ் துறை பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து செய்தது என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு சில கருப்பு ஆடுகள் இருப்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் பொதுவாக விமர்சிப்பதை நிறுத்தவேண்டும். இப்படிப்பட்ட கருப்பு ஆடுகள் பல துறைகளிலும் இருக்கிறார்கள்.

இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாக மட்டுமே நடத்துங்கள். உண்மையை ஆராய்ந்து அதன் பின்னால் உள்ளவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் தவறாக சித்தரிக்க வேண்டாம். ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் குடும்பத்திற்காக நான் பிரார்த்தித்து கொள்கிறேன். நீதி விரைவில் வழங்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.