சாத்தான்குளம் சம்பவம் குறித்து இயக்குனர் ஹரி கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர்

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் ஆகிய இரு வியாபாரிகள் காவல்துறையினர் பிடியில் மரணம் அடைந்த செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்தது. இதுகுறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து இயக்குனர் ஹரி தனது கருத்தை கூறியுள்ளார். அதில், 'போலீஸ் பெருமைகளை கொண்ட ஐந்து திரைப்படங்கள் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்' என்று குறிப்பிட்டு இருந்தார். இயக்குனர் ஹரியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இயக்குனர் ஹரியின் கருத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் மாற்று கருத்தை தெரிவித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய இயக்குனர் அருண்வைத்தியநாதன் இதுகுறித்து கூறியதாவது:-

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒட்டுமொத்த போலீஸ் படையும் மோசமானது, கொடூரமானது என்ற கருத்தை நான் அங்கீகரிக்கவில்லை. கோவிட் 19 துவக்க நாட்களில் தமிழகம் முழுவதும் காவல் துறையினரால் பல நல்ல முயற்சிகள் செய்யப்பட்டன என்பதை தயவு செய்து மறந்துவிடாதீர்கள். சில கருப்பு ஆடுகளுக்காக ஒட்டுமொத்த துறையையும் கருப்பு பட்டியலிடுவதை நிறுத்துங்கள். ஒவ்வொரு துறையிலும் அந்த கருப்பு ஆடுகள் உள்ளன!

குறிப்பாக, சில திரைப்பட துறையை சேர்ந்தவர்கள், ‘போலீஸ் பெருமையை கொண்ட திரைப்படங்கள் இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன்' என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. இது திரைப்பட ஸ்கிரிப்ட் அல்ல, சில லைக்குகள் மற்றும் ரீட்வீட்களுக்காக இதுபோன்ற உணர்ச்சிகரமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். இந்த சம்பவம் குறித்து தீர விசாரித்து இதன் பின்னால் உள்ளவர்களை தண்டிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணமாக இருக்க வேண்டும். அதற்காக முழு காவல்துறையையும் மோசமாக திட்ட வேண்டாம்.

ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் எனது பிரார்த்தனைகள். நீதி விரைவில் வழங்கப்படும் என நம்புகிறேன்’ இவ்வாறு இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறியுள்ளார்.