20 வருடங்களுக்குப்பின் இணைந்த நாகார்ஜுன் மற்றும் ராம்கோபால் வர்மா!

20 வருடங்களுக்குப்பின் நடிகர் நாகார்ஜுன் மற்றும் ராம்கோபால் வர்மா மீண்டும் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

ஆந்திராவில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆபீசர்' படம் தமிழில், சிம்டாங்காரன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. அதில், நாகார்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு மகளாக பேபி காவியா, முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். சாயாஜி ஷிண்டே, இன்னொரு முக்கிய வேடத்தில் வருகிறார். படத்துக்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்துள்ளார், மே.கோ.உலகேசு குமார் சிம்டாங்காரன் பற்றி சொல்கிறார்:-

சிம்டாங்காரன் என்றால் சக்தி மிகுந்தவர் என்று பொருள். மும்பையில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு மும்பையின் போலீஸ் அதிகாரி பஷாரிதான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. விசாரணை அதிகாரியாக நாகார்ஜுன் நியமிக்கப்படுகிறார்.

பஷாரிக்கு தண்டனை வாங்கி தரும் குடும்பத்தை சிறையில் இருந்தபடியே அவர் அழிக்க முயற்சிக்கிறார். அவருடைய முயற்சி என்ன ஆகிறது? என்பது கதை. படத்தின் திரைக்கதை அமைத்து டைரக்டு செய்திருக்கிறார், ராம்கோபால் வர்மா. இவரும், நாகார்ஜுனும் 20 வருடங்களுக்கு முன்பு, உதயா என்ற படத்தில் இணைந்து பணிபுரிந்தார்கள். அதன்பிறகு இருவரும் இணைந்து பணிபுரிந்த படம், இது. மேட்டூர் பா.விஜயராகவன், ரேணுகா மகேந்திரபாபு ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர் என்று கூறினார்.