லியோ படத்தின் 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க இயலாது ..தமிழக அரசு தெரிவிப்பு


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், முதலில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும். இதையடுத்து இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்கலாம் என தெரிவித்த நிலையில், நேற்று மாலை லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்து 7 மணி சிறப்பு காட்சிகள் தொடர்பாக மனுவை வழங்கினர்.

தற்போது, 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை 19ஆம் தேதி முதல் வருகிற 25ஆம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க முடியாது ஏற்கனவே, அரசாணை வெளியிட்ட படி 9 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம், தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் 9 மணி காட்சிகளுக்கான டிக்கெட்களை ரசிகர்கள் வாங்கியுள்ள நிலையில், அதன் நேரத்தை மாற்ற முடியாது என்பதால் 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் இடையில், புதுச்சேரியில் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.