க/பெ ரணசிங்கம் படக்கதை என்னுடையது; எழுத்தாளர் மிடறு முருகதாஸ் புகார்

நடிகர் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள தீத்தான் விடுதியை சேர்ந்த எழுத்தாளர் மிடறு முருகதாஸ் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கறம்பக்குடி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இதழ்களில் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை எழுதி வருகிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகியாகவும் உள்ளேன்.

இந்நிலையில் நான் எழுதி கடந்த 2017-ம் ஆண்டு கதை சொல்லி மாத இதழில் வெளியான 'தவிப்பு' என்ற கதையை மையமாக வைத்து க/பெ.ரணசிங்கம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதை 2018-ம் ஆண்டு நான் வெளியிட்ட தூக்கு கூடை என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

எனவே அனுமதி பெறாமலேயே எனது கதையை பயன்படுத்தி, க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை எடுத்த இயக்குனர் விருமாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

மேலும் மிடறு முருகதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, 2017-ம் ஆண்டு வெளியான எனது கதையை பயன்படுத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது. என்னிடம் கேட்டிருந்தால் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நான் அந்தக் கதையை வழங்கி இருப்பேன். ஆனால் எந்த தகவலும் சொல்லாமல் படம் எடுத்திருப்பது வருத்தத்தை தருகிறது என்றார்.