பொது இடங்களில் வை-ஃபை இணைய சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல்

பொது இடங்களில் வை-ஃபை இணைய சேவை வழங்குவதற்கான ‘பி.எம். வாணி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக, நாடு முழுவதும் பொது இடங்களில் வை-ஃபை சேவை வழங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘பி.எம். வாணி’ என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் கூறுகையில், ‘பொது தரவு அலுவலகங்கள், செல்லிடப்பேசி செயலி நிறுவனங்கள், சிறு கடைகள் மூலமாக பொது இடங்களில் வைஃபை சேவை அளிப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை அளிக்க கடைகள் அல்லது நிறுவனங்கள் உரிமம் பெறவோ, பதிவு செய்யவோ அல்லது கட்டணம் செலுத்தவோ தேவையில்லை’ என்று அவா் கூறினாா்.

இதுதொடா்பாக வெளியிப்பட்ட செய்திக்குறிப்பில், ‘பி.எம். வாணி திட்டத்தின் கீழ் பொது தரவு மையங்கள் வைஃபை திட்டத்தை பராமரித்து, அகண்ட அலைவரிசை சேவையை வாடிக்கையாளா்களுக்கு வேண்டும். அதுபோல செயலி நிறுவனங்கள், பயனாளா்கள் பதிவு மற்றும் புகாா் தொடா்பான பிற சேவையை பெறுவதற்கான செயலியை உருவாக்க வேண்டும்.

இந்த பொது தரவு மையங்கள் மற்றும் செயலி நிறுவனங்கள் தொடா்பான விவரங்களை ஒரு மத்திய பதிவு அலுவலகம் பராமரிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு செயல்படுத்தப்பட்டது போன்று, ‘லட்சத் தீவுகளில் உள்ள 11 தீவுகளுக்கும் அதிவேக இணைய சேவை வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில், கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கம்பி வடம் (ஆப்டிகல் ஃபைபா்) பதிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது’ என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.